குந்தா அணை சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிப்பு : தோட்டத்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக புகார்

By ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே குந்தா அணையில் தேக்கிவைக்கப்படும் தண்ணீர் மூலம், கெத்தை, பரளி, பில்லூர் ஆகிய மின் நிலையங்களில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

அணை அருகே தங்காடு தோட்டம் என்ற பகுதியில், 40-க்கும்மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இக் கிராமத்துக்கு செல்ல அணையை ஒட்டியுள்ள சாலையைத்தான் பயன்படுத்த வேண்டும். இந்த சாலையில் மக்கள் நடந்து செல்ல மட்டுமேமின்வாரியத்தினர் அனுமதிக்கின்றனர். வாகனங்கள் செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தங்கள் தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலையை தலையில் சுமந்து சுமார் 4 கி.மீ. தொழிலாளர்கள் நடந்து வந்து, பிரதான சாலையில் நிற்கும் வாகனங்களில் ஏற்றுகின்றனர். இதனால் காலவிரயம் ஏற்படுவதால் குந்தா சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘குந்தா அணையையொட்டி, தனியார் சிலர் 30 ஏக்கர் அளவுக்கு மின்வாரிய நிலத்தை ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக தேயிலை பயிர் செய்து வருகின்றனர்.

இவர்கள், தங்காடு தோட்டம் கிராமத்துக்கு சாலை வசதி கிடைக்க இடையூறாக உள்ளனர். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

குந்தா தாசில்தார் மகேஸ்வரிகூறும்போது, ‘‘மின்வாரிய இடத்தை அளவீடு செய்து தரக்கோரி மனு அளித்ததன்பேரில், சர்வே பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதி மின்வாரிய கட்டுப்பாட்டில் இருப்பதால், அத்துறை அதிகாரிகள் தான், ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புஇருந்தால், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இப்பிரச்சினைகள் தொடர்பாக பண்பாட்டு மக்கள் தொடர்பக ஒருங்கிணைப்பாளர் சி.திருநாவுக்கரசு, தமிழ்நாடு மின்வாரிய தலைமைப் பொறியாளருக்கு புகார் அனுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை பொறியாளர் த.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

குந்தா அணை தூர்வாரும் பணிகளை ரூ.40.21 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ரூ.18.19 கோடி 2017-ல் வழங்கப்பட்டது.

தூர்வாரப்பட்ட மண்ணைக் கொட்டுவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிலங்களை பயன்படுத்த, வருவாய் துறை தடை செய்ததால் அப்பணிகளை மேற்கொள்ளவில்லை. எனவே, பணிகளை மேற்கொள்ள வழங்கப்பட்ட ஆணை ரத்து செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு எவ்வித செலவுகளும் செய்யப்படவில்லை.

குந்தா பாலம் அணையும், குந்தா புனல் மின் உற்பத்தி நிலையம்1-ம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கடிதத்தின் புனல் மின் உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட மிக முக்கிய அமைப்புகளாகும். குந்தா பாலம் அணை, மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு கருதி, அச்சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்க இயலாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்