தொழில் முனைவோர், சலுகைகளுடன் கூடிய திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடன் பெற்று சுய தொழில் தொடங்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
படித்த இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க நீட்ஸ் திட்டம் மூலம் மானியத்துடன் மாவட்ட தொழில் மையம் மூலமாக தமிழக அரசு கடன் வழங்கி வருகிறது. இதில், ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ. 5 கோடி வரை திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் குடும்பத்தினருக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை.
இத்திட்டத்தில் பயன்பெற தேவையான கல்வித்தகுதி பிளஸ் 2 தேர்ச்சி என தளர்த்தப்படுகிறது. மேலும் தனிநபர், 25 சதவீதம் அதிகபட்ச முதலீட்டு மானியத்தை, ரூ.50 லட்சம் முதல் ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்தில் பட்டியலின, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி தொழில் முனைவோருக்கு, 10 சதவீதம் கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.
இதில், 21 முதல் 35 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்சம் 45 வயது. விண்ணப்பதாரர் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பதிவேற்றப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக் குழுவால் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்புடைய வங்கி கிளைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும்.
மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி, தொலைபேசி எண்: 04343 235567 முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago