தொடர் மழை மற்றும் தென்பெண்ணையாற்று உபரி நீரால் பாரூர் பகுதியில் 24 ஏரிகள் நிரம்பின.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணை, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
இதனால் அணைகளில் இருந்து பாசன கால்வாய் மற்றும் தென்பெண்ணை ஆற்றிலும் உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர், தென்பெண்ணை ஆறு மூலம் நெடுங்கல் தடுப்பணை வழியாக சாத்தனூர் அணைக்கு செல்கிறது.
இத்தடுப்பணையில் இருந்து பாரூர் ஏரிக்குச் செல்லும் தண்ணீர் கால்வாய் வழியாக பாசனத்துக்கும், ஏரிகளிலும் நிரப்பப்படுகிறது. பாரூர் ஏரியின் கீழ் தற்போது 24 ஏரிகள் நிரம்பி உள்ளன. பாரூர் ஏரிக்கு நீர்வரத்து தற்போது விநாடிக்கு 67 கனஅடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. மேலும் ஏரியில் இருந்து திறந்துவிப்படும் தண்ணீர் போச்சம்பள்ளி அருகே கோணணூர் ஏரிக்குச் செல்கிறது. தற்போது இந்த ஏரி நிரம்பிச் செல்லும் தண்ணீர் திருவயலூர் கால்வாய் வழியாக புளியம்பட்டி ஏரி மற்றும் சிறுகுட்டைகள் வழியாக பெனுகொண்டாபுரம் ஏரிக்குச் சென்று கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி மழையளவு மில்லிமீட்டரில், தேன்கனிக்கோட்டை 12, பாரூர் 13.6, தளி 10, பெனுகொண்டாபுரம் 8, போச்சம்பள்ளியில் 7.8 மிமீ மழை பதிவாகி இருந்தது. இதேபோல், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 624 கனஅடியாகவும், அணையில் 51 அடிக்கு தண்ணீர் உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago