50% மானிய விலையில் 100 தார்பாலின்கள் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வழங்கினார்

திருவள்ளூரில் நேற்று 50 சதவீதம் மானிய விலையில் விவசாயிகளுக்கு 100 தார்பாலின்களை மாவட்ட ஆட்சியர்ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,10,000 ஹெக்டர் பரப்பளவில் உணவுதானிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அறுவடையின் போதும், அறுவடைக்கு பின்னும் 15 முதல் 20 சதவீதம் வரை உணவு தானியங்கள் சேமிப்பு இழப்பு ஏற்படுகிறது.

இதை தடுக்க திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கு கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் அட்மா திட்டங்களின்கீழ் 50 சதவீதம் மானிய விலையில் 1,290 தார்பாலின்களை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்கட்டமாக 100 தார்பாலின்கள் வழங்கும் விழா நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தார்பாலின்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் 50 சதவீதம் மானிய விலையில் தார்பாலின்கள் பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ, தங்கள் பகுதி வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை அணுகியோ, பதிவு செய்து, முன்னுரிமை அடிப்படையில் தார்பாலின்களை பெறலாம்.

மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நெல்களில் 50 சதவீதமோ அல்லதுஅதற்கு அதிகமாகவோ உள்ள நெல்களை நேரடியாக நெல்கொள்முதல் நிலையத்தின் அரிசி அரவை ஆலைக்கு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதனால் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்கும் நிலை இருக்காது.

இந்நிகழ்வில், வேளாண்மை இணை இயக்குநர் சம்பத்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபிநேசன், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE