பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராஜ் கொலை வழக்கில் கைதான 5 பேரின் ஜாமீன் மனுவை கடலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தில் கடலூர் மக்களவை திமுக உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷூக்கு சொந்தமான முந்திரி ஆலை அமைந்துள்ளது. இங்கு வேலை பார்த்து வந்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற தொழிலாளி கடந்த செப்டம்பர் மாதம்19-ம் தேதி இரவு மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார் கடந்த அக்டோபர் மாதம் 9 -ம் தேதியன்று எம்பி ரமேஷ் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, ரமேஷின் உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் 11-ம் தேதி ரமேஷ் பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த நிலையில் இதே வழக்கில் கைது செய்யப்பட்ட நடராஜன், அல்லாபிச்சை, கந்தவேல், வினோத், சுந்தர்ராஜன் ஆகிய 5 பேருக்கான நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், நேற்று மீண்டும் கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர் படுத்தினர். 5 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரபாகர் உத்தரவிட்டார்.
இதற்கிடையே 5 பேரும் ஜாமீன் கேட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ஜவகர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, நடராஜன் கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் சரணடைந்துள்ள ரமேஷ் எம்.பி ஏற்கெனவே நீதிமன்ற காவலில் கடலூர் கிளைச் சிறையில் இருப்பது குறிப்பிடத்த்க்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago