தொழில் முனைவோர் ஆன ஐ.டி. நிறுவன ஊழியர் : வெடி, மத்தாப்பு வடிவங்களில் சாக்லேட் செய்து அசத்தல்

தீபாவளியை முன்னிட்டு லட்சுமி வெடி, அணுகுண்டு, ராக்கெட், சங்கு சக்கரம், புஸ்வானம் என பல்வேறு பட்டாசு வடிவங்களில் சாக்லேட்களை செய்து அசத்தி வருகிறார் பொறியியல் பட்ட தாரியான பெண் ஒருவர்.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் புவனாசுந்தரி. பெங்களூரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.டி.) மென்பொறியாளராக பணிபுரிந்தார். திருமணத்துக்கு பிறகு திண்டுக்கல்லிலேயே வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தனது நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட தொழில்முனைவோராக மாற விரும்பினார்.

இதற்காக பல்வேறு பயிற்சி களில் பங்கேற்று வீட்டில் இருந்தே செயல்பட ஏதுவான தொழிலை தேர்வு செய்தார். இதற்காக ஹோம் மேட் சாக்லேட்டை ரசாயனக் கலப்பு இன்றி சிறுவர்களை கவரும் வகையில் தயாரிக்க முடிவு செய்தார்.

முதலில் வீட்டளவில் செய்து உறவினர்களுக்கு விற்பனை செய்துள்ளார். பின்னர் நண்பர்களிடம் கொடுத்துள்ளார். இதற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ஒரே மாதிரி தயாரிக்காமல் பல்வேறு பட்டாசு வடிவங்களில் சாக்லேட்களை தயாரிக்க முடிவு செய்தார். தீபா வளியை முன்னிட்டு சங்கு சக்கரம், துப்பாக்கி, புஸ்வானம், ராக்கெட், லட்சுமி வெடி, அணுகுண்டு ஆகிய வடிவங்களில் தயாரித்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது வெளியூர்களில் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன. இதுகுறித்து புவனா சுந்தரி கூறியதாவது: தீபாவளிக்கு வித்தியாசமாக செய்யலாம் என்று யோசித்தபோது உருவானது தான் வெடிகள் வடிவிலான சாக்லேட். எனது குழந்தைகளுக்கு தருவது போல எவ்வித ரசாயனக் கலப்பும் இன்றி சாக்லேட் தயாரித்து தருகிறேன். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். பிரிட்ஜில் வைக்க வேண்டாம். வெளியூர் ஆர்டர்களுக்கு கூரியர் மூலம் அனுப்புகிறோம்.

ஒரு கிலோ சாக்லேட் ரூ.500-க்கு விற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்