வெள்ள பாதிப்பை தவிர்க்க - வாய்க்கால்களை விரைவாக தூர்வார உத்தரவு : வருவாய் நிர்வாக ஆணையர் மதுரையில் ஆய்வு

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பை தவிர்க்க மழைநீர் விரைந்து வழிந்தோடும் வகையில் கால்வாய்களில் தூர்வாரும் பணியை உடனே முடிக்க வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் கோ.பனீந்திரரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வருவாய் நிர்வாக ஆணையர் கோ.பனீந்திரரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. மாநகராட்சி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். நிர்வாக ஆணையர் பேசுகையில், ‘கண்மாய், வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தடையின்றி தண்ணீர் செல்லும் வகையில் குப்பைகளை அகற்றவும் அறிவுறுத்தினார்.

வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க அனைத்து வாய்க்கால்களிலும் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். டெங்கு, மலேரியா நோய்கள் பரவாமல் தடுக்கவும், குடிநீர் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இடி, மின்னல் காரணமாக உயிரிழப்பை தவிர்க்க போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். முன்னதாக பந்தல்குடி கால்வாய், குருவிக்காரன்சாலை கால்வாய், பனையூர் கால்வாய், பாப்பாக்குடி, குன்னத்தூர் கால்வாய்களில் தூர்வாரும் பணியை பனீந்தர்ரெட்டி பார்வையிட்டார். ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்