மயிலூற்று அருவியை சுற்றுலாத் தலமாக அறிவித்து மேம்படுத்த வேண்டும் : பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை

லாடபுரத்திலுள்ள மயிலூற்று அருவியை சுற்றுலாத் தலமாக அறிவித்து மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பச்சைமலை அடிவாரத்தில் லாடபுரம் கிராமத்தில் மயிலூற்று அருவி உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் மயிலூற்று அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவது வழக்கம்.

அப்போது, பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மயிலூற்று அருவிக்கு திரண்டு வருவது வழக்கம்.

தற்போது, பச்சைமலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், மயிலூற்று அருவியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுகிறது.

இதனால், வழக்கம்போல சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வந்து, அருவியில் குளித்துவிட்டுச் செல்கின்றனர்.

இந்நிலையில், லாடபுரத்திலிருந்து மயிலூற்று அருவிக்கு செல்லும் சாலை ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு குண்டும், குழியுமாகவும், சீமைக் கருவேலஞ் செடிகள் அடர்ந்து வளர்ந்தும், பயணம் மேற்கொள்ளவே இயலாத நிலையில் காணப்படுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு, அருவிக்குச்செல்ல வேண்டிய நிலை உள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு மயிலூற்று அருவி சுற்றுலா தலமாக்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை.

இதுகுறித்து சுற்றுலாப் பயணி அரவிந்த் கூறியது:

பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் குறைந்த பெரம்பலூர் மாவட்ட மக்களின் நலன்கருதி மயிலூற்று அருவியை சுற்றுலாத் தலமாக அறிவித்து, அங்கு ஆண்கள், பெண்கள் தனித்தனியாக குளிப்பதற்கான தளம், உடைமாற்றும் அறை, கழிப்பறை ஆகியவை அமைக்க வேண்டும். குடும்பத்துடன் வருபவர்கள் பொழுதுபோக்க சிறுவர் பூங்கா, ஓய்விடம், குடிநீர்த் தொட்டி, கேண்டீன் வசதி ஆகியவை செய்துதர வேண்டும்.

அருவிக்குச் செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால், அதைச் செப்பனிட்டு, புதர்களை அகற்றி தரமான தார்ச் சாலையாக அமைக்கவும், மலைப்பாதைக்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE