இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட - மீனவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் : ஆட்சியரிடம் குடும்பத்தினர், மீனவர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகை, எல்லை தாண்டி வந்துமீன் பிடித்ததாகக் கூறி அக்.19-ம் தேதி இலங்கை கடற்படையினர் தங்களது கப்பல் மூலம் இடித்து மூழ்கடித்ததில் மீனவர் ராஜ்கிரண் பரிதாபமாக உயிரிழந்தார். கடலில் தத்தளித்த சகமீனவர்கள் சுகந்தன், சேவியர் ஆகியோரை கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

இதனிடையே, இலங்கையில் இருந்து 4 நாட்களுக்குப் பிறகு 23-ம் தேதி மீனவர் ராஜ்கிரணின் உடல் ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, மீனவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

இந்நிலையில், ராஜ்கிரண் இறப்பில் சந்தேகம் இருப்பதால், அவரது உடலை தோண்டி எடுத்து இங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடக்கிய மனுவை ஆட்சியர் கவிதா ராமுவிடம் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா மற்றும் மீனவர்கள் நேற்று அளித்தனர்.

அதன்பின்னர், செய்தியாளர்களிடம் மீனவர்கள் கூறியதாவது: ராஜ்கிரணின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததால் இலங்கை கடற்படை அவரை அடித்து, துன்புறுத்தி கொன்றிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. எனவே, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், இலங்கை கடற்படை மீது சந்தேக மரண வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

திருமணமாகி 40 நாட்களில் ராஜ்கிரண் இறந்துள்ளதால், அவரது மனைவிக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரண தொகை வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE