கறம்பக்குடியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் நூலகப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரக்கோரிய வழக்கில் புதுக்கோட்டை ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
கறம்பக்குடியில் அரசின் பகுதி நேர நூலகம் தனியார் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கறம்பக்குடி 51 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும்.
பல்வேறு தகுதித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் மாணவர்கள் பகுதி நேர நூலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த நூலகத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.
இதனால், கறம்பக்குடி காந்தி பூங்கா பகுதியில் 2014-ல் புதிய நூலகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது வரை பணிகள் முடியவில்லை. பட்டத்திக்காடு ஊராட்சி நூலகத்திலும் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை.
எனவே, கறம்பக்குடி காந்தி பூங்காவில் நடந்து வரும் நூலகக் கட்டுமானப்பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும், பட்டத்திக்காடு பகுதியில் அனைத்து வசதிகளுடன் நூலகம் அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு குறித்து பள்ளிக்கல்வித் துறைச் செயலர், புதுக்கோட்டை ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிச.15-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago