நிலுவை சம்பளம், தீபாவளி போனஸ் வழங்கக்கோரி - திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை : நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் ஆவேசம்

By செய்திப்பிரிவு

தீபாவளி போனஸ் வழங்கக்கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பத்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 115 தூய்மைப்பணியாளர்கள், 66 கொசு ஒழிப்பு பணியாளர்கள் எனமொத்தம் 181 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி ரூ.374-ம், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ.309 என கணக்கிடப்பட்டு வழங்கப்படுவ தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தூய்மைப்பணி யாளர்கள் மற்றும் கொசு ஒழிப்புப்பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக்கூறி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 181 ஒப்பந்த பணியாளர்களும் நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் நகராட்சி சார்பில் எங்களுக்கு தினசரி ரூ.300-ல் இருந்து ரூ.375 வரை ஊதியம்வழங்கப்படுகிறது. ஆனால், ஒப்பந்ததாரர் எங்களுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை மட்டுமே வழங்குகிறார். தூய்மைப்பணி யில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு வேண்டும், சம்பள உயர்வு, விழாக்கால போனஸ், மருத்துவ காப்பீடு, பிஎப் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

ஆனால் எந்த ஒரு அடிப்படை தேவைகளையும் ஒப்பந்ததாரர் தரப்பில் எங்களுக்கு செய்து தரப்படவில்லை. கடந்த 2 மாதங்களாக எங்களுக்கு சேர வேண்டிய ஊதியமும் இதுவரை வழங்க வில்லை. தற்போது, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் போனஸ் வழங்க வேண்டும்.

எனவே, எங்கள் நிலையை கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள சம்பள பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். விழாக்கால போனஸ் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்புப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்’’ என்றனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியனிடம், தூய்மைப்பணியா ளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்ற டிஆர்ஓ நகராட்சி நிர்வாகத்திடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை யேற்ற அவர்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்