திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, அவிநாசி (தனி), பல்லடம், காங்கயம், தாராபுரம் (தனி), உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் வெளியிட்டார்.
தாராபுரம் (தனி) 2,58,979, காங்கயம் 2,57,810, அவிநாசி (தனி)- 2,80,826, திருப்பூர் (வடக்கு)- 3,81,217, திருப்பூர் (தெற்கு)- 2,77,532, பல்லடம்- 3,91,494, உடுமலை- 2,69,648, மடத்துக்குளம்- 2,48,705 என மொத்தம் 23 லட்சத்து 66 ஆயிரத்து 211 வாக்காளர்கள் மாவட்டத்தில் உள்ளனர். தாராபுரம், காங்கயம், அவிநாசி, உடுமலை, பல்லடம், மடத்துக்குளம் ஆகிய 6 தொகுதிகளில் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.
திருப்பூர் ஆட்சியர் சு. வினீத் கூறியதாவது: கடந்த மார்ச் 19-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் இதர விவரங்களில் திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்காக 7,239 கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களான திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், சார்-ஆட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருக்கும். அதேபோல பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்ள நேற்று (நவ.1) முதல் வரும் 30-ம் தேதி வரை மனுக்கள் அளிக்கலாம். நவம்பர், 13, 14, 27 மற்றும் 28 ஆகிய நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 2022, ஜன. 5-ம் தேதியை வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இரட்டைப்பதிவை நீக்க வேண்டும்
பல்வேறு கட்சியினர் பேசும்போது ‘‘தென்மாவட்ட மக்கள் அதிகளவில் திருப்பூரில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இங்கும், அவர்களது சொந்த மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. இரட்டைப் பதிவு முறையை நீக்கவேண்டும். கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படவில்லை.குறிப்பாக திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இப்பிரச்சினை நிலவுகிறது. இதில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே வாக்காளர் பட்டியல் பணி முழுமை பெறும்’’ என்றனர்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி, திருப்பூர் கோட்டாட்சியர் ஜெகநாதன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் ஹமீது, தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
நீலகிரி
உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி வெளியிட்டார்.உதகை- 2,04,092, கூடலூர்- 1,87,880, குன்னூர்- 1,89,835 மொத்த வாக்காளர்கள் என மூன்று தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 5,81,807 வாக்காளர்கள் உள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட இறுதி பட்டியலை காட்டிலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 5,143 பேர் குறைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 686 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆட்சியர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி கூறும்போது, ‘நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் 1-ம் தேதி (நேற்று) தொடங்கி வரும் 30-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். 13, 14, 27 மற்றும் 28-ம் தேதிகளில் அனைத்து வாக்குசாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும். டிசம்பர் 20-ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதியன்று வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago