நூல் விலை ரூ. 50 உயர்ந்ததால் : பின்னலாடை உற்பத்தியில் சிக்கல் : திருப்பூர் தொழில் துறையினர் அதிருப்தி

By செய்திப்பிரிவு

நவம்பர் மாதத்துக்கான நூல் விலை அனைத்து ரகங்களுக்கும் ரூ. 50 அதிரடியாக உயர்த்தப்பட்டதால், தொழில் துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தொடர் பண்டிகையால் திருப்பூர் உள்நாட்டுக்கான பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றன.

நூற்பாலைகளை பொறுத்தவரை பஞ்சு விலையை அடிப்படையாகக் கொண்டு மாதம்தோறும் 1-ம் தேதி நூல் விலையை நிர்ணயிக்கின்றன. கடந்த 2020 நவம்பர் முதல் 2021 ஏப்ரல் வரை தமிழக நூற்பாலைகள் ஒசைரி நூல் விலையை உயர்த்தின. இருப்பினும், கடந்த சில மாதங்களாக நூற்பாலைகள் நூல் விலையை ஒரே சீராக தொடர்கின்றன. இந்நிலையில் நடப்பு மாதத்தில் அனைத்து ரக நூல்களுக்கும் ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பது தொழில்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வரலாறு காணாத விலையேற்றம்

‘டீமா’ அமைப்பின் முத்துரத்தினம் கூறும்போது ‘‘வரலாறு காணாத நூல் விலை உயர்வால் புதிய ஆர்டர் எடுக்க முடியாத நிலைக்கும், பழைய ஆர்டரை முடிக்க முடியாத நிலைக்கும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது வேலை இழப்பு மற்றும் பொருளாதார சீரழிவுக்கு வழிவகுக்கும். கடந்த ஓராண்டில் ரூ.100 உயர்ந்திருந்த நூல் விலை, தற்போது தடாலடியாக அனைத்து ரகங்களுக்கும் ரூ. 50 உயர்ந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது’’ என்றார்.

நூல் விலை விவரம் (கிலோவுக்கு): 20-ம் நம்பர் கோம்டு ரக நுால் (வரி நீங்கலாக) ரூ. 305, 24-ம் நம்பர் ரூ. 315, 30-ம் நம்பர் நுால் ரூ. 325, 34-ம் நம்பர் ரூ. 345, 40-ம் நம்பர் ரூ. 365, 20-ம் நம்பர் செமிகோம்டு ரக நுால் ரூ. 295, 24-ம் நம்பர் ரூ. 305, 30-ம் நம்பர் ரூ.315, 34-ம் நம்பர் ரூ. 335, 40-ம் நம்பர் ரூ. 355 ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்