பெண் எஸ்பி-க்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் டிஜிபி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நேற்று ஆஜராயினர். வழக்கின் விசாரணை இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாகப் பணியாற்றி வந்தவர் தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்பி ஒருவர் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய அப்போதைய செங்கல்பட்டு எஸ்.பி. ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இருவரின் மீதும் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் 400 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி தாக்கல் செய்தனர். தொடர்ந்து கடந்த ஆக.9-ம் தேதி விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகிய இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டு, இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டு, வழக்கின் விசாரணை கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
தன் மீதான வழக்கை விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் விசாரிக்கத் தடை விதிக்கக் கோரி, முன்னாள் சிறப்பு டிஜிபி தாக்கல் செய்திருந்த மனுவைக் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க விழுப்புரம் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
பிடிவாரண்ட் எச்சரிக்கை
இதற்கிடையே, இவ்வழக்கு கடந்த வாரம் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆஜராகாத முன்னாள் சிறப்பு டிஜிபி-க்குக் கண்டனம் தெரிவித்திருந்த நீதிபதி 1-ம் தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி இருவரும் ஆஜராயினர். அப்போது, சிபிசிஐடி போலீஸார் இவ்வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்றும் ஒருதலைப்பட்சமான விசாரணையை சிபிசிஐடி போலீஸார் மேற்கொண்டனர் என்றும் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வாதாடியது. மேலும் தங்களுக்கு வழங்க வேண்டிய ஆவணங்களை முறையாக வழங்கவில்லை என்றும், எனவே வழக்குக்குத் தேவையான ஆவணங்கள், தடயவியல் அறிக்கை, சிசிடிவி கேமரா வீடியோக்கள் உள்ளிட்டவற்றைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு கோரிக்கை விடுத்தது. இதற்கு அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு கேட்ட ஆவணங்களை இன்றைக்குள் (நவ.2) வழங்க நடுவர் கோபிநாதன் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago