வடகிழக்குப் பருவமழையின்போது பலத்த காற்று வீசும் என்பதால் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பயிர்களைக் காத்திடுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இராம.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 754.66 மி.மீட்டராகும். இதில், அக்டோபர் மாதம் வரை பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவு 545 மி.மீட்டருக்குப் பதிலாக 853 மி.மீட்டர் பெய்துள்ளது. இது, 57 சதவீதம் கூடுதலாகும்.
தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைவதைத் தொடர்ந்து வரக்கூடிய நாட்களில் அதிக மழை பெய்யவும், பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளது.
நடப்பு சம்பா பருவத்தில் 1 லட்சத்து 74 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிக மழையின் காரணமாக பயிர்கள் பாதிப்படைந்து மஞ்சள்நிறமாக மாற வாய்ப்புள்ளது.
எனவே, அதிகப்படியான நீரை வடித்துவிட்டு, இளம் பயிர்களுக்கு ஒரு கிலோ ஜிங்க் சல்பேட், 2 கிலோ யூரியா ஆகியவற்றை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைகளின் மீது தெளிக்கலாம். பயிர் வளர்ச்சி குன்றிக் காணப்பட்டால் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து ஒரு நாள் இரவு வைத்திருந்து, அக்கலவையுடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து இடலாம்.
தண்டு உருவாகும் பருவத்திலும், பூக்கும் பருவத்திலும் உள்ள பயிர்களுக்கு, 1.4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் நீரில் முதல் நாள் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி, அக்கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ பொட்டாஷ் உரத்தை, 190 லிட்டர் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.
இவ்வாறு செய்தால் மகசூல் இழப்பு ஏற்படாமல் பயிரைக் காப்பாற்றலாம். வடகிழக்குப் பருவமழையின்போது கனமழையால் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, நல்ல காய்ப்புள்ள தென்னந்தோப்புகளில் முதிர்ந்த தேங்காய்களை அறுவடை செய்ய வேண்டும். தென்னை மரங்களின் கொண்டைப் பகுதியிலுள்ள அதிக எடை கொண்ட ஓலைகளை வெட்டி அகற்ற வேண்டும்.
மக்காச்சோளம், உளுந்து, தட்டைப்பயறு, கரும்பு பயிர்களின் வயல்களில் மழைநீர் தேங்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மழையால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து வட்டார அளவிலான வேளாண் துறை அலுவலர்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago