தூத்துக்குடி மாவட்டத்தில் 4-வது நாளாக பலத்த மழை - ஆத்தூர் அருகே வெள்ளத்தில் சிக்கிய பள்ளி வாகனம் : மாணவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்பு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தாமிரபரணி பாசனத்தில் உள்ள பெரிய குளமான கடம்பா குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. கடம்பா குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூர் அருகே வரண்டியவேல் விலக்கு பகுதியில் பாலத்தை தாண்டி சாலையில் சுமார் 1 அடி உயரத்துக்கு பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் செல்லும் வாகனங்கள் திண்டாடி வருகின்றன. இந்த பகுதியில் தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் நிறுத்தப்பட்டு, வாகனங்கள் பாதுகாப்பாக அந்த பகுதியை கடந்து செல்ல உதவி வருகின்றனர். நேற்று காலை அந்த வழியாக வந்த பள்ளி வாகனம் தண்ணீரில் சிக்கிக் கொண்டது. தீயணைப்பு படையினர் வாகனத்தில் இருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டு, மாற்று வாகனம் மூலம் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மாவட்டத்தில் உள்ள மானாவாரி குளங்களுக்கும் தண்ணீர் கணிசமாக வரத் தொடங்கியுள்ளது. மீனவர்கள் நேற்று 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு(மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 30, காயல்பட்டினம் 48, குலசேகரன்பட்டினம் 56, விளாத்திகுளம் 24, காடல்குடி 10, வைப்பார் 16, சூரன்குடி 15, கோவில்பட்டி 10, கயத்தாறு 21, கடம்பூர் 33, ஓட்டப்பிடாரம் 32, மணியாச்சி 16, வேடநத்தம் 10, கீழஅரசடி 9, எட்டயபுரம் 11.3, சாத்தான்குளம் 25, வைகுண்டம் 42, தூத்துக்குடியில் 21.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கோவில்பட்டி

கோவில்பட்டி பகுதியில் நேற்று காலையில் வெயில் காணப்பட்ட நிலையில், பகல் 12.15 மணியில் இருந்து பலத்த மழை பெய்தது. மானாவாரி நிலங்களில் விவசாயிகள் ராபி பருவ பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழை அவர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அதேநேரம் மழையால் தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்