கார்த்திகை தீபத் திருவிழாவில் பங்கேற்கும் - பக்தர்களுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம் : தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள், 2 கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பது அல்லது கரோனா பரிசோதனை செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் 7-ம் தேதி இரவு தொடங்கு கிறது. பின்னர், மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடி மரத்தில், வரும் 10-ம் தேதி காலை கொடியேற்றம் நடைபெறும். அதன்பிறகு, 10 நாட்கள் உற்சவம் நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 19-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழா தொடர்பாக முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், துறை வாரியாக மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது அவர் பேசும்போது, “தீபத் திரு விழாவுக்காக திருவண்ணாமலை நகரைச் சுற்றி அமைக்கப்பட உள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் தடுப்புகளை அமைத்து, நகர பகுதிக்குள் பக்தர்கள் அதிகளவில் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் உள்ளிட்டவர்கள் 2 கட்ட தடுப்பூசி செலுத்தி இருப்பது அல்லது கரோனா பரிசோதனை சான்று வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் குடிநீர், கழிப்பறை வசதியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறையினர் செய்து கொடுக்க வேண்டும். திருவண்ணாமலை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள குளங்களில் தண்ணீர் நிரம்பி இருப்பதால், குளங்களை மூடி வைத்து, பக்தர்கள் செல்லாமல் இருக்க காவல்துறையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

மழைக் காலம் என்பதால் மின் கம்பம் மற்றும் மின்மாற்றிகளை பராமரித்து வைத்திருக்க வேண்டும். அன்னதானம் வழங்க அனுமதி கிடையாது” என்றார். இதில், கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்