கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் அதன் தீவிர பாதிப்பில் இருந்து தைரியமாக இருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அருங்குன்றம் ஊராட்சியில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள சமுதாயக் கூட கட்டிட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அருகே உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண்களிடம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா? என விசாரித்தார். சிலர் இல்லை என்று கூறியதால் அவர்களிடம் ஆட்சியர் பேசும்போது, ‘‘கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் யார்? யார்? என்று பட்டியல் தயாரித்து செல்போனில் தகவல் தெரிவிக்கிறோம். அப்படி இருந்தும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில்லை. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். முதல் டோஸ் தடுப்பூசி போடும்போது காய்ச்சல், உடல் சோர்வு இருக்கும். அவர் களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.
ஆனால், அவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடும்போது ஒன்றும் ஆகாது. வயதானவர்கள், இருதய பாதிப்பு ஏற்பட்டவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 85 ஆயிரம் பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியை போட வேண்டியுள்ளது. யாரும் பயப்பட வேண்டாம். தடுப்பூசி போட்டும் கரோனா தொற்று வந்தால் தீவிர பாதிப்பு இருக்காது. தடுப்பூசி போட்டவர்கள் தைரியமாக இருக்கலாம். மருத்துவர்கள் ஞாயிறு விடுமுறை எடுத்து 6 மாதங்களாகிறது. அவர்கள் உங்களுக்காக வேலை செய்கிறார்கள்’’ என்றார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 85 ஆயிரம் பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியை போட வேண்டியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago