தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், திருப்பூரில் பல்வேறு விளையாட்டுகளை உள்ளடக்கிய ‘ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ்’ எனப்படும் ஒருங்கிணைந்த விளையாட்டுமையம் ரூ.18 கோடி மதிப்பில் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானமே திருப்பூர் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ளது. இங்கு, இறகுபந்து உள்ளிட்ட சில போட்டிகளுக்கான பயிற்சி மைதானங்கள் தவிர, வேறு வசதிகள் இல்லை.இதனால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் குழு போட்டிகள், தனிநபர் போட்டிகளை நடத்தவும், மத்திய அரசின் விளையாட்டு ஊக்குவிப்புத் திட்டங்களின் கீழ் போட்டிகளை நடத்தவும் தனியார் பள்ளி, கல்லூரி மைதானங்களையே சார்ந்திருக்க வேண்டிய சூழல் தற்போது வரை உள்ளது.
திருப்பூரில் சர்வதேச தரத்தில்அனைத்து விளையாட்டுகளுக்குமான மைதானங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விளையாட்டு வீரர்களும், விளையாட்டு சங்கத்தினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தற்போது உள்விளையாட்டு அரங்கு அமைந்துள்ள கட்டிடத்தின்பின்புறத்தில் சுமார் 11.5 ஏக்கர் பரப்பளவில் கால்பந்து, தடகளத்துக்கான சின்தடிக் ஓடுதளம், வாலிபால், கூடைப்பந்து, டென்னிஸ், நீச்சல் குளம் உட்பட பல்வேறு விளையாட்டுகளுக்கான ஒருங்கிணைந்த மைதானத்தை கட்ட தமிழக அரசு திட்டமிட்டது. தற்போது இதற்கான பணிகள் தொடங்கியுள்ளதால் திருப்பூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள், விளையாட்டு சங்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் (திருப்பூர் பொறுப்பு) இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறும்போது ‘‘திருப்பூர் மாவட்ட விளையாட்டுத் துறையின் தேவை மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சர்வதேச தரத்தில் ரூ.18 கோடி மதிப்பில் ‘ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ்’ கட்டமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக ரூ.9 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி, சில தினங்களுக்கு முன் பணிகள்தொடங்கின.
தமிழகத்தில் சென்னையில்கூட நீச்சல் குளத்துடன் கூடிய ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் இல்லை,திருப்பூரில் நீச்சல் குளத்துடன் சேர்த்து அமைக்கப்படுவது சிறப்பம்சம். டென்னிஸ் விளையாட்டுக்கு இரு மைதானங்கள் அமைக்கப்படுகின்றன. இது, திருப்பூரில் தரமான வீரர், வீராங்கனைகள் உருவாக உதவும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago