வத்தல்மலை மலைப்பாதை சாலையோரங்களில் - தடுப்புச் சுவர் அமைக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை :

வத்தல்மலை மலைப்பாதையில் சாலையோரங்களில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரியில் இருந்து 20 கிமீ தூரத்தில் வத்தல்மலை மலை அடிவாரமான பூமரத்தூர் கிராமம் உள்ளது. இங்கிருந்து மலைப்பாதை சாலையில் சுமார் 10 கிமீ தூரத்தில் வத்தல்மலை மீது சின்னாங்காடு கிராமம் உள்ளது. மேலும், மலை மீது கொட்லாங்காடு, பால்சிலம்பு, ஒன்றிக்காடு, பெரியூர், நாயக்கனூர் உள்ளிட்ட 8 கிராமங்கள் உள்ளன. மலை மீது சுமார் 5,000 மக்கள் வசிக்கின்றனர். மலையில் உள்ள இறுதி கிராமமான நாயக்கனூரை அடைய மலை அடிவாரத்தில் இருந்து 25 கிமீ தூரம் பயணிக்க வேண்டும்.

அடிக்கடி மண் சரிவு

வத்தல்மலைக்கு செல்லும் மலைப்பாதை முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த தால், இங்கு சாலை வசதியில்லாமல் இருந்தது. இதனால், மலைவாழ் மக்கள் உருவாக்கிய மண் சாலையில் மிகவும் சிரமத்துடன் மக்கள் பயணம் செய்து வந்தனர். இம்மக்களின் நீண்ட கோரிக்கையை தொடர்ந்து வனத்துறையின் அனுமதியுடன்கடந்த 2013-ம் ஆண்டு அரசு சார்பில் சாலை வசதி செய்து தரப்பட்டது.

மலைப்பாதையின் மண் தன்மை காரணமாக அடிக்கடி இங்கு மண் சரிவு ஏற்பட்டு சாலையில் பழுது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பாரத பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அடிவாரம் முதல் நாயக்கனூர் வரையுள்ள சாலை புதுப்பிக் கப்பட்டது. தரமான சாலை கிடைத்திருப்பதால் வத்தல்மலை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இருப்பினும், சாலையோரம் தடுப்பு சுவர்கள் இல்லாததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

அச்சத்துடன் பயணம்

இதுதொடர்பாக வத்தல் மலையைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறியதாவது:

மலைப்பாதை சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர்கள் அண்மையில் சாலை புதுப்பிக்கப்பட்டபோது ஏறத்தாழ சாலையின் மட்டத்துக்கு மூழ்கி விட்டன. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கொண்டை ஊசி வளைவுகளை அச்சத்துடன் கடக்க வேண்டியுள்ளது. குறிப்பாக எதிரே வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகனத்தில் செல்வோர் சாலையோரங்களில் பாதுகாப்பற்ற நிலையில் நிற்கும் அபாயம்உள்ளது.

எனவே, மலைப்பாதை சாலை கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் ஆபத்து நிறைந்த பகுதிகளை ஆய்வு செய்து தடுப்புச்சுவர் அல்லது இரும்பு தடுப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்