பென்னாகரம் வட்ட மலைக் கிராமங்களுக்கு - பழுதுடன் இயங்கும் அரசு நகரப் பேருந்தால் பயணிகள் சிரமம் :

பென்னாகரம் வட்டத்தில் உள்ள மலைக் கிராமங்களுக்கு பழுதான மின்கலனுடன் (பேட்டரி) அரசுப் பேருந்து இயக்கப்படுவதால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்டது ஜெல்மாரம்பட்டி கிராமம். இக்கிரமத்துக்கு தருமபுரியில் இருந்து பென்னாகரம் வழியாக தினமும் (26-சி )அரசு நகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இப்பேருந்து சேவை மூலம் மாங்கரை, பவளந்தூர், வட்டுவன அள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் பயனடைகின்றனர்.

இங்குள்ள கிராமங்கள் அனைத்தும் மேடும், பள்ளமுமான நிலவியல் அமைப்பு கொண்ட சிறுசிறு மலைக் கிராமங்கள் ஆகும். இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு நகரப் பேருந்தில் சில வாரங்களாக மின்கலன் (பேட்டரி) பழுதடைந்துள்ளது. இதனால், பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் சிலர் கூறியதாவது:

தருமபுரி-ஜெல்மாரம்பட்டி வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு நகரப் பேருந்து கடந்த சில வாரங்களாக பழுதான மின்கலனுடனேயே இயக்கப்படுகிறது. இதனால், பேருந்தின் இன்ஜினை ஓட்டுநர் நிறுத்தினாலோ, இயக்கத்தின்போது தற்செயலாக இன்ஜின் இயக்கம் நின்று விட்டாலோ, பயணிகள் இணைந்து பேருந்தை தள்ளிவிட்டு இயக்க வேண்டியது உள்ளது.

இதனால், இப்பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மலைப் பாதையில் செல்லும்போது இவ்வாறு இன்ஜின் நின்றால் பெரிய ஆபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இப்பிரச்சினைக்கு தீர்வு காண மலைக் கிராமங்களுக்கு பழுதில்லாத பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பேருந்துகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்