திண்டுக்கல் நகரில் தீபாவளி விற்பனை நேற்று காலை களைகட்டியது. விடுமுறை நாளான நேற்று நகரில் வசிப்போர் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமப் பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் பொருட்களை வாங்க கடைவீதிகளில் குவிந்தனர்.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விடுமுறை தினமான நேற்று திண்டுக்கல் நகரில் சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் ஏராளமானோர் துணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க நேற்று காலை முதலே கடைவீதிகளில் திரண்டனர். இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலையில் அவ்வளவாக மழையில்லாததால் அதிக அளவிலானோர் கடைகளுக்கு வந்திருந்தனர். தற்காலிகமாக சாலையோரம் கடைகளைத் திறந்த வியாபாரிகளுக்கு காலையில் ஓரளவு வியாபாரம் ஆனது. மாலையில் வியாபாரம் மேலும் விறுவிறுப்படையும் என எதிர்பார்த்த நிலையில், மதியம் 2 மணி முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. மாலையில் கனமழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் கட்டில்கள் மேல் துணிகள் உள்ளிட்டவற்றை வைத்து விற்பனை செய்த வியாபாரிகள், அவசர அவசரமாக தார்ப்பாய்களால் மூடி பொருட்களை பாதுகாத்தனர். தீபாவளிக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்யும்பட்சத்தில் பொருட்களை வாங்குவதற்காக செலவிட்ட முதலீடாவது திரும்பக் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகள் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago