தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பகலிலும் மிதமான மழை பெய்தது. தூத்துக்குடி மாநகர பகுதியில் நேற்று பகல் 1 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. மேலும் 2 முதல் 3 நாட்களுக்கு அதே இடத்தில் நீடிக்கவும், அதன் பிறகு கரையை நோக்கி நகரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை, நேற்று ஆரஞ்சு எச்சரிக்கையாக மாற்றப்பட்டது. வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், வரும் 4-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் சிரமம்
தொடர் மழையால் தூத்துக்குடி மாநகர குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. கிரேட் காட்டன் சாலை, காசுக்கடை பஜார் சாலை, வ.உ.சி.சாலை, விஇ.சாலை, தேவர்புரம் சாலை, பிரையன்ட் நகர், ரயில் நிலையம் சாலை, அண்ணா நகர், பொன் சுப்பையா நகர், முத்தம்மாள் காலனி, கலைஞர் நகர், ஸ்டேட் பாங்க் காலனி, சுந்தரவேல்புரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் அதிகம் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி எடுக்கவும், பொருட்கள் வாங்கவும் தூத்துக்குடி நகரில் குவிந்த மக்கள், மழையால் அவதிப்பட்டனர். தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட்டது.
அமைச்சர் ஆய்வு
சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி சார்பில் ராட்சத மோட்டார்கள் மூலம் உறிஞ்சி அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆய்வு செய்தார். ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் தி.சாரு உடனிருந்தனர்.அமைச்சர் கூறும்போது, “மழை நீரை ராட்சத மின் மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி பகுதியில் 28 இடங்கள் தாழ்வான பகுதிகள் என கண்டறியப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியின் சார்பில் 180 மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பெரும் மழை வந்தாலும், அதை சமாளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளன” என்றார் அவர்.
மழை அளவு விவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): குலசேகரன்பட்டினம் 1, விளாத்திகுளம் 13, காடல்குடி 8, வைப்பார் 8, சூரன்குடி 23, கோவில்பட்டி 5, கயத்தாறு 3, எட்டயபுரம் 11.02, சாத்தான்குளம் 14, வைகுண்டத்தில் 3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பகுதியளவுக்கு 11 வீடுகள், முழு அளவில் 3 வீடுகள் என, மொத்தம் 14 வீடுகள் மழைக்கு சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் 19 வீடுகள் இடிந்தன
குமரி மாவட்டத்தில் 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்துக்கு நேற்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் விட்டு, விட்டு கனமழை பெய்தது. இதனால் கடும் குளிர் நிலவியது. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 25 மிமீ., மழை பெய்திருந்தது.
பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,558 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 43.56 அடியாக உள்ளது. அணையில் இருந்து உபரியாக 1,635 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.87 அடியாக உள்ளது. அணைக்கு 1,231 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பொய்கை அணையில் ஒவ்வொரு ஆண்டும் கனமழையின்போது நீர் மட்டம் 28 அடியை தாண்டாது. தற்போது இந்த அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் அணை பகுதியை சுற்றியுள்ள 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் பாசன குளங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது. மழையால் தோவாளை பகுதியில் 8 வீடுகள், திருவட்டாறு பகுதியில் 3 வீடுகள், விளவங்கோட்டில் 7 வீடுகள், கல்குளம் பகுதியில் ஒரு வீடு என மொத்தம் 19 வீடுகள் இடிந்தன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago