இந்துக்களின் முக்கிய பண்டிகை களில் ஒன்றான தீபாவளி வரும் 4-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜவுளி, பட்டாசு, இனிப்பு கடைகளில் வியாபாரம் விறுவிறுப்படைந்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்ததால் வியாபாரம் மந்தமாக இருந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மழையின் தீவிரம் குறைந்துள்ளது. இதனால் தீபாவளி வியாபாரம் விறுவிறுப்படைந்துள்ளது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. தீபாவளி வரை மழை இல்லை என்றால் பட்டாசு வியாபாரம் விறுவிறுப்படையும்” என்றனர்.
ஆட்சியர் எச்சரிக்கை
இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மருத்துவ மனைகள், வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது. பொதுமக்களின் உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பேரியம் ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ கூடாது. இதை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.உரிமம் பெற்ற பட்டாசு விற்பனை செய்யும் கடைகளில் மற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது. பாதுகாப்புக்காக ஈரச் சாக்குகள், தண்ணீர், மணல் வாளிகளை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். புகைபிடிக்கக்கூடாது என்ற அறிவிப்பு பலகை வைத்திருக்க வேண்டும்.
உதிரி பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. எளிதில் தீப்பற்றும் எண்ணெய், காதிகம், பெயின்ட் போன்றவற்றை கடைகளிலோ அல்லது கடைகளின் அருகிலோ சேமித்து வைக்கக் கூடாது.
ஓலையால் வேயப்பட்ட கூரையின் கீழ் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. சீன பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டால் அதுகுறித்து 04633 290548 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்” என்று கூறியுள்ளார்.
கோவில்பட்டி
ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் நேற்று குவிந்தனர். இதனால் கோவில்பட்டி பேருந்து நிலைய பகுதி, பிரதான சாலை, தெற்கு பஜார், எட்டயபுரம் சாலை, மாதாங்கோவில் தெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்த நிலையிலும், மக்கள் பண்டிகைக்கான பொருட்களை வாங்கினர். போலீஸார், போக்குவரத்து நெருக்கடி ஏற்படாதவாறு வாகனங்களை ஒழுங்குபடுத்தினர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago