அடிப்படை வசதிகள் இல்லாத ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியை சுற்றி பார்க்க வனத்துறையினர் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என சுற்றுலாப் பயணிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் இருந்து 40 கி.மீ., தொலைவில் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. ஏலகிரி மலைக்கு உட்பட்ட அத்தானவூர் ஏரி நிரம்பி அங்கிருந்து மலை வழியாக ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வருகிறது. இந்த நீர்வீழ்ச்சி அருகாமையில் லிங்க வடிவிலான முருகன் கோயில் உள்ளது.
ஏலகிரி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்தால் ஜலகம் பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டும், இதைக் காண உள்ளூர் மட்டுமின்றி வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை, ஆந்திரா மாநிலம் குப்பம், கர்நாடகா மாநிலம் பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
எனவே, ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியை சுற்றுலாத் தளமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியை திருப்பத்தூர் மாவட்ட வனத் துறையினர் பராமரித்து வருகின் றனர். நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் ‘சூழல் சுற்றுலா மேம்பாட்டு குழு’ சார்பில் பல விதமான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல நுழைவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்டாலும் உள்ளே சென்ற பிறகு வாகன கட்டணம், தண்ணீரில் குளிக்க தனிக்கட்டணம், காலணியை பாதுகாக்க தனிக்கட்டணம் என கட்டண கொள்ளையில் வனத்துறை யினர் ஈடுபட்டு வந்தாலும், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர், ஓய்வறைகள் என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என சுற்றுலாப் பயணிகள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறும்போது, ‘ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியை காண பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வருகிறோம்.
ஆண்கள், பெண்கள் அருவி யில் குளித்த முடித்தபிறகு துணிகளை மாற்ற தனி இடம் இல்லை. பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லை. வாகனங்களுக்கு தனித்தனியாக கட்டணம் வசூலிக் கப்பட்டாலும், அதை முறையாக பாதுகாக்கும் வசதிகள் இல்லை. வாகனங்கள் திருடுபோனால் நிர்வாகம் பொறுப்பல்ல என கூறுகின்றனர்.
அருவியை சுற்றிலும் நிலத்தடி நீர்வளம் இருந்தாலும் கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை. விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின் றனர். அதன்படி பார்த்தால் தினசரி ரூ.40 முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பெறப்படும் பணத்தை நீர்வீழ்ச்சியை மேம்படுத்த வனத்துறையினர் செலவழிக்க வேண்டும். அதேபோல, மழைக்காலங்களில் நீர்வீழ்ச்சியில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வீணாகிறது.
குறிப்பாக, ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியை சுற்றுலாத் தலமாக அறிவித்து இங்கு வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்’’ என்றனர்.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட வனத்துறை அதிகாரி களிடம் விசாரித்தபோது, ‘‘சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக கழிப்பறை கட்டும் பணிகள் அடுத்த 10 நாட்களில் தொடங்க உள்ளோம். வாகனங்கள் பார்க்கிங் செய்ய தனி இடம் ஒதுக்கப்பட்டு அங்கு ஆட்கள் நியமிக்கப்பட்டு வாகனங்கள் பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் மதுபாட்டில்கள் கொண்டு வரக்கூடாது என கண்டிப்புடன் அறிவுறுத்தி வந்தாலும், சிலர் விதிமீறி கொண்டு வருகின்றனர். அவர்களை கண் காணிக்கவும் வன ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நீர்வீழ்ச்சியை தூய்மையாக வைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago