திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் யூரியா உள்ளிட்ட உரங்கள் வாங்கச் சென்றால், கூடுதல் இடுபொருட்களை வாங்குமாறு உரக்கடை உரிமையாளர்கள் நிர்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது. உரக்கடைகளில் யூரியா, டிஏபி உரம் மற்றும் 20-க்கு 20 உள்ளிட்ட உரங்கள் முறையே ரூ.270, ரூ.1,200, ரூ.1,380-க்கு விற்பனை செய்கின்றனர். தற்போதுபருவமழை பெய்து வருவதால், மாவட்டத்தில் பல்வேறு விவசாயிகள் நடவுப் பணிகளை தொடங்கியுள்ளனர். இதை பயன்படுத்தி உரங்கள் வாங்கச் செல்லும் விவசாயிகளிடம் கூடுதலாக இடுபொருட்களையும் வாங்க வேண்டும் என உரக்கடை உரிமை யாளர்கள் நிர்பந்திக்கின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்தால், உரத்தை வழங்க மறுக்கின்றனர்.
அனைத்து உரக்கடைகளிலும் எவ்வித நிர்பந்தமும் இன்றி உரங்கள் கிடைக்க மாவட்ட வேளாண் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதேபோல விதிமீறும் உரக்கடைகள் மீது விவசாயிகள் புகாரளிக்க ஏதுவாக வேளாண் அலுவலர்களின் தொடர்பு எண்களை விலைப்பட்டியலுடன் வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல இருப்பு மற்றும் விலைப்பட்டியலை தவறாமல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் கூறும்போது ‘‘உரம் வாங்க வரும் விவசாயிகளை, இடுபொருட்களை வாங்குமாறு யாரும் நிர்பந்திக்கக் கூடாது. தற்போது 2,000 டன் உரம் வந்துள்ளது. நடப்புஆண்டில் யூரியா தட்டுப்பாடு இல்லாத வகையில் விநியோகம் செய்யப்படும். யூரியா வாங்கும்போது கூடுதல் இடுபொருட்களை வாங்க வற்புறுத்தும் உரக்கடைகள் மீது புகார் அளித்தால் தொடர்புடைய கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago