திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் - மெட்ரிகுலேஷன் இணை இயக்குநர் ஆய்வு : அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுரை

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் உத்தரவுப்படி நாளை (நவ.1) முதல் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட உள்ளன. இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை மெட்ரிகுலேஷன் இணை இயக்குநர் ஆனந்தி, கடந்த 29,30-ம் தேதிகளில் திருப்பூர்மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறப்பதற்கு ஏதுவாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தார். இன்றும் (அக்.31) பல்வேறு பள்ளிகளில் ஆய்வு நடத்தவுள்ளார். 14 வட்டாரக் கல்வி அலுவலர்கள் 4 மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளி திறப்புக்கான அறிவுரை வழங்கினார்.

பள்ளி குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு, கழிவறைகளை சுத்தம் செய்தல், வளாகத்தில் உள்ள தேவையற்றமரக்கிளைகளை அப்புறப்படுத்துதல் போன்ற தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அனைத்து விதிமுறைகளையும் பள்ளிகளில் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என கல்வி அலுவலர்களுக்கு இணை இயக்குநர் அறிவுறுத்தினார்.

நீலகிரி

நீலகிரி மாவட்டக் கல்வி அலுவலர் செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘கரோனா காரணமாக மூடப்பட்டிருந்த கல்விக் கூடங்களில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் திறக்கப்படவுள்ளன. பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். மாணவர்கள் முகக்கவசம் அணிதல், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், ஒரு வகுப்புக்கு 20 மாணவர்களை மட்டுமே அமர வைத்து கற்பித்தல், கழிவறை வசதி, சோப்பு போட்டு கை கழுவும் வசதி போன்ற தூய்மை நடவடிக்கைகளை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்