திருப்பூர் மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இப்பணிகளால் திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் இருந்து பெருமாநல்லூர் செல்லும் சக்தி திரையரங்கம் வழியாக செல்லும் 60 அடி சாலை தற்போது 30 அடி சாலையாகசுருங்கியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது: அவிநாசி சாலை-பெருமாநல்லூர் சாலைக்கு செல்லும் இணைப்புச் சாலையாகவும், புதிய பேருந்து நிலையம் மற்றும் வடக்கு உழவர் சந்தைக்கு பொதுமக்கள் சென்று வரும் சாலையாகவும் சக்தி திரையரங்க சாலை உள்ளது. அதேபோல பனியன் நிறுவனங்கள் மற்றும் கடைகள் என எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதி. 60 அடி சாலையாக இருந்த இந்த சாலை, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகளால் 30 அடி சாலையாக சுருங்கியுள்ளது. இருமருங்கிலும் 15 அடிக்கு தனியார் ஆக்கிரமிப்பு செய்து கொள்ளும் வகையில் ‘ஸ்லாப் கல்’ அமைத்துள்ளனர். நடைபாதையின், இருமருங்கிலும் அளவைக் குறைத்து, சாலையை விரிவாக போட்டிருக்கலாம். ஆனால் சாலையை பாதியாக சுருக்கியதால், யாருக்கும் பலன் இல்லை, என்றனர்.
திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் சுப்பிரமணியம் கூறும்போது ‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் சாலைகள் அந்தளவுக்குதான் வரும். பொதுமக்கள் நடந்து செல்ல அதிகளவில் இடம் இருக்கும். போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago