பட்டாசு கடைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியீடு

பட்டாசு கடைகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடைகளை அமைத்துக் கொள்ள 25 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 81 கடைகளுக்கு நிரந்தர பட்டாசு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டாசு விற்பனை தொடங்கிய பின் அக்கடைகளில் மற்ற பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது. பாதுகாப்புக்காக எந்நேரமும் ஈரச்சாக்குகள், தண்ணீர் மற்றும்மணல் வாளிகளை தயார் நிலையில்வைத்திருக்க வேண்டும்.

புகைப் பிடிக்கக் கூடாது என்ற அறிவிப்பு பலகையை கடையில் வைப்பதோடு, அருகில் யாரையும் புகைப்பிடிக்க அனுமதிக்கக் கூடாது. மின்தடை ஏற்படும் பட்சத்தில் மெழுவத்தி, எண்ணெய் விளக்குகள், தீக்குச்சிகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. டார்ச், பேட்டரி விளக்குகளை மட்டும் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும்.

உதிரி பட்டாசுகளை விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். கடைகளை மூடும்போது அனைத்து மின்இணைப்புகளையும் துண்டித்த பின்னரே கடையை மூட வேண்டும்.

எளிதில் தீப்பற்றக் கூடிய பெயின்ட், எண்ணெய் மற்றும் காகிதங்களை கடைகளிலோ அல்லது கடைகளின் அருகிலோ சேமித்தல் கூடாது. உரிமம் பெறப்பட்ட கட்டிடத்தில் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் ஓலையால் வேயப்பட்ட கூரையின் கீழ் விற்பனை செய்யக் கூடாது.

சீன பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டால், அதுகுறித்து பொதுமக்கள் 18005997626 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது 98403 27626 என்ற வாட்ஸ்-அப் எண் மூலமாகவோ புகார் அளிக்கலாம்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE