காஞ்சிபுரம் மாவட்டத்தில் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்:
தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இந்தத் திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். அதே நேரம் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பெருமளவில் மாசுபடுகின்றன.
பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் மாசால் சிறு குழந்தைகள், பெரியோர் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம் சுற்றுச் சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீபாவளி பண்டிகை நாளில் கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.பொதுமக்கள் குறைந்த ஒலி மற்றும் குறைந்த மாசு ஏற்படுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். திறந்த வெளியில் பொதுமக்கள் ஒன்று கூடி பட்டாசுகளை வெடிக்கலாம். அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சர வெடிகளைத் தவிர்க்க வேண்டும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago