மழை, பேரிடர் மீட்பு பணிக்கு புதுவையில் 11 குழுக்கள் அமைப்பு :

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை மற்றும் பேரிடர் கால மீட்பு தொடர்பான கூட்டம் நேற்று நடைபெற்றது. துணை ஆட்சியர் கிரிசங்கர் தலைமை தாங்கினார். இதில் துணை ஆட்சியர்கள் தமிழ்ச்செல்வன், கந்தசாமி மற்றும் வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி, பொதுப்பணி, மின்சாரம், தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மழை மற்றும் பேரிடர் காலத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆட்சியர் கிரி சங்கர், ‘‘புதுச்சேரியில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மழை மற்றும் பேரிடர் மீட்பு அமைப்பு ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சுகாதாரம், பொதுப்பணி, உள்ளாட்சி, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகள் அடங்கிய 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு குழுவுக்கு 16 பேர் வீதம் 176 பேர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட தயார் நிலையில் இருப்பார்கள். இதுதவிர, ஒவ்வொரு உதவி ஆட்சியர் அலுவலகத்திலும் ஒரு குழுவும், ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு குழுவும், அவசர கால பேரிடர் மையத்தில் ஒரு குழுவும் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

அவசர கால பேரிடர் மையத்தில் உள்ள 1070, 1077 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு மக்கள் புகார்களை தெரிவிக்கலாம். மேலும், நீர் நிலைகள் மற்றும் தண்ணீர் செல்லும் வழிப்பாதைகளை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE