தீபாவளியையொட்டி சரவெடி வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. போதுமான அவகாசம் வழங்காமல் முடிவெடுப்பதா என உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்து 70 பட்டாசு ஆலைகள் உள்ளன. 2015-ல் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2018 அக்டோபரில் இடைக்காலத் தீர்ப்பு விதிக்கப்பட்டது.
அதில், பட்டாசு தயாரிக்க பேரியம் பயன்படுத்தக் கூடாது என்றும், சரவெடிகள் தயாரிக்கக் கூடாது என்றும், புகை, சப்தம் குறைந்த அளவு உள்ள பசுமைப் பட்டாசுகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால், வழக்கமான முறையில் தயாரிக்கப்பட்ட பட்டாசு உற்பத்தியைத் தொடர முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்தனர். மேலும், பசுமைப் பட்டாசு குறித்து உரிய விளக்கம் இன்றி 3 மாதங் களுக்கும் மேலாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
அதன்பின்னர், கடந்த ஆண்டு மார்ச்சில் "நீரி" தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் ஆய்வுக்குப் பிறகு பேரியம் நைட்ரேட் அளவைக் குறைத்து, மாற்றாக ஜியோ லேட் சேர்த்து புதிய பார்முலாவை அளித்தனர்.
அதைக் கொண்டு, பசுமைப் பட்டாசு தயாரிக்கும் பணி சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், பேரியத்தால் தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, சரவெடிகள் தயாரிக்கவோ, விற்கவோ, வெடிக்கவோ தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், எந்தப் பகுதியிலாவது தடை செய்யப்பட்ட பட்டாசுகள் தயாரிக்கப்பட்டாலோ, பயன்படுத்தப்பட்டாலோ அந்தந்த மாநிலச் தலைமைச் செயலர்கள், உள்துறை செயலர்கள், காவல்துறை தலைவர்கள், எஸ்.பி.க்கள், சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
விற்கப்பட்ட சரவெடிகள்
கடந்த ஒரு மாதமாகவே பட்டாசு விற்பனை நடந்து வருவதால், பலர் சரவெடிகளை வாங்கி வைத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவால் அவற்றை வெடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதோடு குட்கா போன்று இனி சரவெடிகளும் சட்ட விரோதமாக தயாரிக்கப்படலாம் என்றும், பட்டாசு தொழிலுக்கு விதிக்கப்படும் பல்வேறு கட்டுப்பாடுகளால் இத்தொழிலில் நிரந்தரமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago