பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து - மாட்டு வண்டியில் சென்று முன்னாள் எம்எல்ஏ போராட்டம் :

By செய்திப்பிரிவு

காரைக்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏவும், விவசாயிகள் சங்க மாநிலத் தலைவருமான குணசேகரன் மாட்டு வண்டியில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்தும் கூடுதல் வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும் காரைக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் தலைமையில் அக்கட்சியினர் மாட்டு வண்டியில் அண்ணா சிலை வரை சென்றனர். தொடர்ந்து எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஆட்டோவை கயிற்றில் கட்டி இழுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கண்ணகி, நிர்வாகிகள் சாத்தையா, ஏஐடியுசி நிர்வாகிகள் ராமச்சந்திரன், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பல சட்டங்களை கொண்டு வந்துள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை தினமும் உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

ஏற்கெனவே கரோனாவால் வேலையிழந்து, வாழ்வாதாரம் இழந்த மக்களால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியவில்லை. தீபாவளிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் எதிர்காலத்தில் மாட்டு வண்டியில்தான் பயணிக்க முடியும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்