கரூர் மாவட்டத்துக்கு 2022- 2023-ம் ஆண்டுக்கு ரூ.7,184 கோடி முன்னுரிமை கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மாதாந்திர பணி ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2022-23-ம் ஆண்டுக்கான நபார்டு வங்கியின் கரூர் மாவட்டத்துக்கான வளம் சார்ந்த கடன் திட்டத்தில் ரூ.7,184 கோடி முன்னுரிமை கடன்களுக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கையேட்டை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வெளியிட, முதல் பிரதியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஈரோடு மண்டல முதன்மை மேலாளர் ஜார்ஜ் பிரபு லாசர் பெற்றுக்கொண்டார்.
2022 -23-ம் ஆண்டுக்கான நபார்டு வங்கியின் கரூர் மாவட்டத்துக்கான வளம் சார்ந்த கடன் திட்டத்தில் ரூ.7,184 கோடி முன்னுரிமை கடன்களுக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், குறுகிய கால பயிர்க் கடனாக ரூ.2,233 கோடி, நீண்ட காலக் கடன்களில், நீர் வளம், விவசாயக் கருவிகள், தோட்டக்கலை பயிர் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, விவசாய கிடங்குகள், உணவு பதப்படுத்துதல் போன்றவற்றுக்காக ரூ.863 கோடி, வேளாண் உள்கட்டமைப்பு கடன்களுக்கு ரூ.77 கோடி, வேளாண் சார்ந்த தொழில் கடன்களுக்கு ரூ.160 கோடி, சிறு, குறு, மத்திய தொழில் வளர்ச்சிக்கு ரூ.1,803 கோடி, வெளிநாட்டு ஏற்றுமதி வர்த்தகங்களுக்கு ரூ.676 கோடி, கல்விக் கட ன்களுக்கு ரூ.128 கோடி, வீட்டு வசதிக் கடன் திட்டங்களுக்கு ரூ.620 கோடி, மரபு சாரா எரிசக்தி கடன்களுக்கு ரூ.13 கோடி, சமூக உள்கட்டமைப்பு கடன்களுக்கு ரூ.16 கோடி, இன்ன பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.595 கோடி நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
முன்னோடி வங்கி மேலாளர் காசிவிஸ்வநாதன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பரமேஸ்குமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago