ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.97 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறும் அரியலூர் ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதியிடம் 18 கிராம ஊராட்சித் தலைவர்கள் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.
ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குவாகம், புதுக்குடி, கவரப்பாளையம், நாகப்பந்தல், அணிக்குதிச்சான், விழுதுடையான், கருக்கை, கொருக்கூர், பெரியாத்துக்குறிச்சி, வாரியங்காவல், ராங்கியம், ராமன், அழகாபுரம், சிலம்பூர், கே.வல்லம், திருகளபூர், இடையக்குறிச்சி, கோவில்வாழ்க்கை ஆகிய ஊராட்சித் தலைவர்கள், ஆட்சியரிடம் அளித்த மனு:
ஆண்டிமடம் ஒன்றியத்தில் 30 ஊராட்சிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை பழுதுநீக்கம் செய்ய தகுதியுடைய 395 பயனாளிகளை கண்டறிந்து தலா ரூ.50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பட்டியலை, ஒன்றிய நிர்வாகம் நிராகரித்து விட்டு, தனி நபர், அரசியல் கட்சியினர் அளித்த பட்டியலுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆனால் அதன் நகல் வழங்கப்படவில்லை.
மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் 23 ஊராட்சிகளுக்கு கான்கிரீட் தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதற்கான வேலை உத்தரவை வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டால் சரியான பதில் இல்லை.
எனவே, இனிவரும் காலங்களில் கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளையும் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கே வழங்க வேண்டும். ஊராட்சி மன்றத்தின் செயல்பாடுகள், சுதந்திரமாகவும், அரசியல் தலையீடு இல்லாமலும் ஊராட்சி சட்ட விதிகளின்படி நடைபெற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, பாமக மாநில செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு, பாமக மாநில துணைத் தலைவர் சின்னத்துரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago