ராபி பருவ சாகுபடி பணிகள் தொடங்கியும் உரம் தட்டுப்பாடு - ஆட்சியர் அறிவித்த 1,810 டன் யூரியா எங்கே இருக்கிறது? : கூட்டுறவு சங்கங்கள் கைவிரிப்பதால் விவசாயிகள் கேள்வி

ராபி பருவ விவசாயப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், தூத்துக்குடியில் டிஏபி மற்றும் யூரியாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால்விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவத்தில் சுமார் 1.75 லட்சம் ஹெக்டேர் மானாவாரி நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், வெங்காயம், மிளகாய், பருத்தி, குதிரைவாலி போன்ற பயிர்களை கடந்த புரட்டாசி முதல் வாரம் விவசாயிகள் பயிரிட்டனர். அதன் பின்னர் சரிவர மழை பெய்யாததால் முளைப்பு ஏற்படாமல் விதைகள் கெட்டுப் போயின. பல கிராமங்களில் விவசாயிகள் 3 முறை அழித்து விதைத்தனர். ஒரு முறை விதைப்புக்கு ரூ.6 ஆயிரம் என்றால் 3 முறை விதைப்புக்கே இந்த ஆண்டு ரூ.18 ஆயிரம் வரை செலவு செய்தாகிவிட்டது. தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில் பயிர்களுக்கு யூரியா உரமிட வேண்டும். ஆனால், கூட்டுறவு சங்கங்களில் யூரியா இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: ஆண்டுதோறும் செப்டம்பர் 2-ம் வாரத்திலேயே அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், தமிழக அரசின் உரக்கிடங்கு நிறுவனம் மூலம் அடி உரம் டி.ஏ.பி வழங்கப்படும். நடப்பாண்டு இதுவரை அனுப்பிவைக்கப்படவில்லை. மாறாக இயற்கை உரமிடுமாறு விவசாயிகளுக்கு, அதிகாரிகள் அறிவுரை கூறினர். வேறு வழியின்றி அடி உரமாக காம்ப்ளக்ஸை இட்டோம்.

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்வதால் மேலுரமான யூரியா வேண்டியுள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரம் இருப்பு இல்லை. அரசு டெல்டா மாவட்டங்களுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை மானாவாரி விவசாயிகளுக்கு கொடுப்பதில்லை. அரசு நிர்ணயித்த விலை ரூ.270 மட்டுமே. ஆனால், சில தனியார் உரக்கடைகள் இருப்பு வைத்துள்ள உரத்தை ரூ.350-க்கு விற்பனை செய்கின்றன.

டிஏபி உரத்தை முறையாக கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்காதது போல், யூரியா விவகாரத்திலும் அரசு மெத்தனப்போக்குடன் உள்ளது. விவசாயிகள் பரிதவிக்கின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை விளையும் மகசூல் மூலம் விவசாயிகள் கஷ்டஜீவனத்தை நடத்துகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் 1,810 டன் யூரியா இருப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எங்கு இருப்பு உள்ளது என்பதை தெரிவித்தால், யூரியா உள்ள இடத்துக்கே விவசாயிகள் நேரடியாகச் சென்று யூரியா வாங்க தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE