தண்டனை கைதிகள் மேல்முறையீடு குறித்து விழிப்புணர்வு : நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

By செய்திப்பிரிவு

தண்டனை கைதிகளுக்கு மேல்முறையீடு செய்வது, அதற்கான சட்ட உதவிகள் பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், காற்குடியைச் சேர்ந்தவர் பதிபூரணம். இவர், 1994-ல் நடந்த கொலை வழக்கில் செங்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த நெல்லை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், 1996-ல் பதிபூரணத்துக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், பதிபூரணம் இலவச சட்டப் பணிகள் ஆணையத்தின் மூலம் 2018-ல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாமதமாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளேன் என கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழக சிறைகளிலுள்ள 3,538 பேரில் 553 பேர் மட்டும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என கூறப்பட்டிருந்தது. இதில், எத்தனை பேர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய விரும்புகின்றனர் என்பது குறித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பதிபூரணம் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் வீ.பாரதிதாசன், எஸ்.ஆனந்தி அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினர்-செயலர் ராஜசேகர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், 67 பேர் சட்டப்பணிகள் ஆணையத்தின் வழக்கறிஞர் மூலம் மேல்முறையீடு செய்யவும், 85 பேர் தங்கள் தரப்பிலேயே சொந்தமாக வழக்கறிஞர் வைத்துக் கொள்ளவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். 401 பேருக்கு மேல்முறையீடு செய்ய விருப்பமில்லை என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள், தலைமை குற்றவியல் நீதிபதிகள் உள்ளிட்டோர் தங்களது மாவட்டத்திலுள்ள மத்திய சிறைகளில் மாதந்தோறும் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தண்டனை சிறைவாசிகளை சந்தித்து மேல்முறையீடு செய்வது தொடர்பாகவும், சட்ட உதவிகள் குறித்தும் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை நவ. 2-க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்