போளூர் அடுத்த கேளூர் ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களை கடித்து காயப் படுத்தி வந்த குரங்கு நேற்று கூண்டில் சிக்கியது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் ஊராட்சியில் குரங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. அந்த குரங்குகளுக்கு பழங்கள் உள்ளிட்ட உணவை கிராமமக்கள் வழங்கி வருகின்றனர். மேலும் கடைகளுக்கு முன்பு தொங்க விடப்பட்டிருக்கும் வாழைப்பழம் மற்றும் திண்பண்டங்களை, உரிமையுடன் குரங்குகள் ருசித்து விடுகின்றன. அதேபோல், வீட்டின் உள்ளே சென்று குளிர்சாதன பெட்டியை (பிரிட்ஜ்) திறந்து, அதில் வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்களை, வீட்டின் அங்கத் தினர்களில் ஒருவராக தன்னை கருதிக்கொண்டு, இயல்பாக பருகுகிறது. இதுமட்டுமின்றி, வீட்டின் வெளி பகுதி மற்றும் மாடியில் உலர வைக்கப்படும் பொருட்களையும் விட்டுவைக்க வில்லை. கேபிள் வயர்களையும் கடித்து சேதப்படுத்திவிட்டு செல் கின்றன.
குரங்குகளின் சேட்டைகளை பெரியளவில் பொருட்படுத்தாமல், அனுசரித்து சென்ற கிராம மக்களுக்கு நேரிடையாகவே தொல்லை கொடுக்க தொடங்கியது ஒரு குரங்கு. சாலைகளில் செல்பவர்கள், வீட்டின் முன்பு விளையாடும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை, அந்த குரங்கு விரட்ட தொடங்கியது. பின்னர், அவர்களை கடிக்கவும் செய்துள்ளது. கடந்த 2 வாரங்களில் 10-க்கு மேற்பட்ட மக்களை கடித்து காயப்படுத்தி உள்ளது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். இதனால், வீதியில் நடந்து செல்வதற்கு கூட மக்கள் அச்சப்பட்டனர். ஒரு கட்டத்தில் கையில் கம்புடன் நடமாட வேண்டிய நிலை உருவானது. நீண்ட காலமாக கிராமத்தில் ஒரு அங்கமாக சுற்றி வந்த குரங்கை, தங்களுக்கு எதிரான கூட்டமாக பார்க்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
இதையடுத்து கிராம மக்களை கடித்து காயப்படுத்திய குரங்கை பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள், கிராம மக்களின் கோரிக்கையை பொருட்படுத்த வில்லை என கூறப்படுகிறது.
இதனால், கிராம மக்களே களத்தில் இறங்கினர். இதற்காக நரிக்குறவ சமுதாயத்தின் உதவியை நாடினர். அவர்கள் மூலமாக கூண்டை கொண்டு வந்து, மக்களை காயப்படுத்திய குரங்கு நடமாடும் பகுதியில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
இந்நிலையில், அக்கூண்டில் நேற்று குரங்கு சிக்கியது. இதனால் நிம்மதியடைந்த கிராம மக்கள், கூண்டுடன் குரங்கை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago