திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது:
சிவக்குமார்: பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் (பிஏபி)குண்டடம் பிரதான கால்வாய் புதுநிழலி கிளை கால்வாயில் 3 சுற்று தண்ணீரும் வரவில்லை. தாராபுரம் சார்-ஆட்சியரிடம் முறையிட்ட பிறகு 2 நாட்கள் மட்டும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. தண்ணீர் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெள்ளகோவில் அருகே எல்லைக் காட்டுவலசை சேர்ந்த விவசாயி ஒருவர் தண்ணீர் திருடியதாகக் கூறி, அவருக்கு வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. அதேபோல பொன்பரப்பில் உள்ள தேங்காய் நார் தொழிற்சாலை தண்ணீர் திருடியதாகக் கூறி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதேசமயம் வெள்ளகோவில் தனியார் நூற்பாலை மீது அளிக்கப்பட்ட விதிமீறல் புகார் குறித்து நடவடிக்கை இல்லை. இந்த பாரபட்சமான நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட வேண்டும்.
வேலுசாமி: பிஏபி பாசனத்தில் வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு உரிய தண்ணீர் வழங்கப்படவில்லை. பிஏபி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, பிஏபி 1993-ம் ஆண்டு சட்டத்தை அமல்படுத்தி நீர் விநியோகம் செய்ய வேண்டும். சட்டவிதிப்படி சமச்சீர் பாசனத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்தசட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்பதை எழுத்துபூர்வமாக அறிவிக்க வேண்டும்.
பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திருட்டு தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பியதால், விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடையே வாக்குவாதம் எழுந்தது.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவண மூர்த்தி பேசும்போது ‘‘தண்ணீர் திருட்டில் எவ்வித சமரசம் செய்து கொள்ளக்கூடாது என ஏற்கெனவே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. பிஏபி தண்ணீர் திருட்டுபிரச்சினைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் கூறி, தனியாக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago