கோமாரி நோயிலிருந்து கால்நடைகளை காக்க ஏக்கல்நத்தம் மலைக்கிராமத்தில் நூதன வழிபாடு :

By செய்திப்பிரிவு

கோமாரி நோயிலிருந்து கால்நடைகளை காக்க, ஏக்கல்நத்தம் மலைக் கிராம மக்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகே ஏக்கல்நத்தம் மலைக் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வளர்த்து வரும் கால்நடைகளில் சில, கோமாரி நோய் தாக்குதலால் உயிரிழந்து உள்ளன. இதனால், அச்சமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இங்குள்ள கங்கம்மா கோயில் முன்பு, அரிசி சாதத்தை படையலிட்டும், சிறிய மண்பானையில் வேப்பிலைகளை வைத்தும், பூஜை செய்யப்பட்டது. பின்னர், அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை, பூஜை செய்த படையலின் அருகே அமர வைத்து, அவர் மீது மஞ்சள், கும்குமம் கலந்த புனித நீர் ஊற்றப்பட்டது. அந்த இளைஞர், படையலிட்ட உணவு, சிறு பானையை எடுத்துக் கொண்டு, நிர்நிலையைத் தேடி ஓடி, அங்கு அவற்றைக் கரைத்தார். இவ்வாறு செய்வதன் மூலம், கால்நடைகளை தாக்கிய கோமாரி நோய் விலகும். இனி, கால்நடைகளை இந்த நோய் தாக்காது என்பது எங்களின் நம்பிக்கை என்றனர்.

இதுதொடர்பாக கிராம மக்கள் மேலும் கூறும்போது, நாங்கள் நாட்டு மாடுகளை மட்டுமே வளர்க்கிறோம். மாடுகளில் இருந்து பாலை கறப்பது கிடையாது. மாட்டின் பால், அதன் கன்றுக்குதான் என்கிற வழக்கத்தை பல காலமாக பின்பற்றி வருகிறோம். எங்களின் ஒரே சொத்து கால்நடைகள்தான், வணிக நோக்கில் பால் வியாபாரம் செய்யாத நிலையில், அவ்வப்போது, பணத் தேவைக்காக கால்நடைகளை சந்தையில் விற்பனை செய்வோம். தற்போது, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் காணப்படுவதால், சிறப்பு பூஜையில் ஈடுபட்டோம். எங்கள் கிராமத்துக்கு இதுவரையில் கால்நடை மருத்துவர்கள் யாரும் வந்தது கிடையாது, என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்