திருவள்ளூர் மாவட்டத்தில் தோட்டக்கலை துறை, தன்னார்வலரான நல்ல சந்தை ஜெகன் மற்றும் ஆச்சி மசாலா நிறுவனத்துடன் இணைந்து சிவப்பு புரட்சியாக மிளகாய் சாகுபடி செய்து விவசாயிகள் அதிக வருமானம் பெற வழிவகை செய்துதர மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே முடிவு செய்தது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், முதற்கட்டமாக 150 ஹெக்டேர் பரப்பில் இயற்கை முறையில் மிளகாய் சாகுபடி செய்வதற்கான 'சிவப்பு புரட்சி' என்ற திட்டம் தொடக்க விழா மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்று, விவசாயிகளுக்கு மிளகாய் நாற்றுகளை அளித்து, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நடைபெற்ற விவசாயிகளுக்கான பயிற்சியில், இயற்கை முறையில் மிளகாய் சாகுபடி செய்வது குறித்து விளக்கப்பட்டது.
நிகழ்வில், ஆட்சியர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் மிளகாய் 706 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்படுகிறது. இதன்மூலம் விவசாயிகளுக்கு குறைந்த வருமானமே கிடைக்கிறது. எனவே, சந்தைக்கு ஏற்ற யுஎஸ்341 என்ற மிளகாய் ரகத்தை விவசாயிகள் பயிரிடும்போது செலவு குறைந்து, இருமடங்கு அதிகமாக 2-4 டன் மகசூல் கிடைக்கிறது; வருமானமும் இருமடங்காக பெருகுகிறது.
இச்சூழலில், மாவட்டத்தில் விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வருமானத்தை பெருக்குவதற்காகவும், இயற்கை முறையில் நஞ்சற்ற மிளகாய் சாகுபடி செய்வதற்காகவும் நடப்பு நிதி ஆண்டில் அரசு ரூ.30 லட்சம் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில் சிவப்பு புரட்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் அரசு தோட்டக்கலை பண்ணையில் விவசாயிகளுக்கு தேவையான யுஎஸ்341 மிளகாய் நாற்றுகள் 30 லட்சம் எண்ணிக்கையில் உற்பத்தி செய்து ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் நாற்றுகள் ரூ.20 ஆயிரம் மானியத்தில் வழங்கப்படும். விவசாயிகள் சாகுபடி செய்த பிறகு தொழில் நுட்பங்கள் குறித்த சந்தேகங்களை தோட்டக்கலைத் துறையை அணுகி தெளிவு படுத்திக் கொள்ளலாம் என்றார்.
இந்நிகழ்வில் தோட்டக்கலைத் துணை இயக்குநர் ஜெபகுமாரி அனி, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநர் ராஜேஸ்வரி பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago