பல ஆண்டுகளுக்கு பிறகு - மணிமுத்தாறு, உப்பாற்றில் பெருக்கெடுத்தோடும் தண்ணீர் :

சிவகங்கை மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மணிமுத்தாறு, உப்பாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உப்பாறு, மணிமுத்தாறு, சருகணியாறு, நாட்டாறு, தேனாறு, பாலாறு, நாட்டாறுகால், விருசுழியாறு, பாம்பாறு ஆகிய 9 சிற்றாறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகள் மூலம் 572 கண்மாய்கள் பயன் பெறுகின்றன. இந்த கண்மாய்கள் மூலம் 50,000 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன.

இந்த ஆறுகள் பல ஆண்டுகளாக சீரமைக்காதது, மணல் கடத்தல் ஆகிய காரணங்களால் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்திருந்தன. இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், சமூக ஆர்வலர்கள் உதவியுடன் நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகளை தொடங்கினார். இப்பணியை தற்போதைய ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியும் மேற்கொண்டு வருகிறார்.

இதனால் தற்போது பெய்யும் மழையில் சிற்றாறுகளில் தண்ணீர் ஓடுகிறது. சிவகங்கை அருகே ஏரியூர் கண்மாயில் மணிமுத்தாறு தொடங்கி கண்ணங்குடி வழியாக 58 கி.மீ. செல்கிறது.

அதேபோல் உப்பாறு மதுரை மாவட்டம் திருவாதவூர் பெரிய கண்மாயில் தொடங்கி சிவகங்கை மாவட்டம் தமறாக்கி வழியாக 42 கி.மீ. சென்று மானாமதுரை அருகே வைகை ஆற்றில் கலக்கிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE