கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று காரணமாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடந்து வந்தது. இந்நிலையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேரடியாக நடந்தது. ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். விவசாயிகள் ஏற்கெனவே அளித்த 171 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது விவசாயிகள் பேசியதாவது:
எண்ணேகொல்புதூர் தடுப் பணையில் இருந்து படேதலாவ் பெரிய ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். நிலங்களை சர்வே செய்ய விண்ணப்பம் செய்து பல மாதங்களாகியும் அளவீடு செய்யாமல் காலதாமதம் ஏற்படுகிறது. காட்டுப்பன்றிகளால் சேதமாகும் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் நெல்லில் புகையான் நோய் தாக்குதலால், ஆயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை வட்டத்தை சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். உழவர் உற்பத்தியாளர்கள் குழு மதிப்புக்கூட்டு இயந்திரம் மையம் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். இக்குழுவுக்கு கடனுதவிகள் பெற்றத் தர வேண்டும். தென்னை மரங்களில் இருந்து நீரா பானம், இறக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் மரங்களில் நோய்கள் தாக்கம் குறையும். கோமாரி நோய் தாக்கம் அதிகரித்து கால்நடைகள் அதிகளவில் உயிரிழந்துள்ளன. இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு பெற்றத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் அளித்த பதில், விவசாயிகள் அளித்துள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான விளக் கதினை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். மனுக்களுக்கு உரிய பதில் அளிக்காத அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எண்ணே கொல்புதூர் திட்டத்தில் நிலம் எடுப்பு பணிகள் முடிந்து, ஒப்பந்தம் கோரப்பட்டு இறுதி செய்யப்பட உள்ளது நிலங்கள் சர்வே செய்ய 50 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு மேல் பெறப்பட்டுள்ளது. 70 நிலஅளவை யர்கள் மட்டுமே உள்ளனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து நில அளவையாளர்கள் வரவழைத்து பணிகள் விரைவுப்படுத்தப்படும். கால்நடைகளுக்கு நவம்பர் முதல் வாரத்தில் கோமாரி நோய்தடுப்பூசி செலுத்தப்படும். இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு பெற்றுத் தர அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago