விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க - சின்ன வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் : பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, சின்ன வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ப. வெங்கடபிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகள் பேசியது:

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வீ.ஜெயராமன்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகளவு உரங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தனியார் விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கை.களத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்படவும், பெரம்பலூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முறையாக இயங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொம்மனப்பாடி பகுதியில் வேளாண் பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்த வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.செல்லதுரை: மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயத்தின் விலை தற்போது கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே, விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். சின்ன வெங்காயம் கிடைக்காத பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு ரேஷன் கடை மூலமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் காணப்படுவதால், டிரோன் மூலம் மருந்து தெளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க இளைஞரணிச் செயலாளர் வி.நீலகண்டன்: விவசாய மின்மாற்றிகளில் பழுது ஏற்பட்டால், அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். கரும்பு வெட்டுவதற்கு கூலி அதிகரித்து வருவதால், இயந்திரம் மூலம் வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு அரசு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ்: பெரம்பலூர் வட்டாரத்தில் பயிர்க் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்