புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கிய - 2 முதியோர் இல்லங்கள், மனநல காப்பகத்துக்கு ‘சீல்’ :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 2 முதியோர் இல்லங்கள் மற்றும் ஒரு மனநல காப்பகத்தை அதிகாரிகள் பூட்டி நேற்று சீல் வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி முதியோர் இல்லங்கள், மனநல காப்பகம் செயல்பட்டு வருவதாக ஆட்சியருக்கு புகார் வந்தது.

இதையடுத்து, பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆட்சியர் கவிதா ராமு நேற்று அறந்தாங்கி அருகே அழியாநிலை, ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் உள்ள முதியோர் இல்லங்களை ஆய்வு செய்தார். இதில், 2 முதியோர் இல்லங்களும் அனுமதியின்றி செயல்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து அழியாநிலை முதியோர் இல்லத்தில் இருந்து 37 ஆண்கள் உட்பட 68 பேர், ஒத்தக்கடை முதியோர் இல்லத்தில் இருந்து 51 ஆண்கள் உட்பட 59 பேர் என மொத்தம் 127 முதியோர்கள் மீட்கப்பட்டனர்.

மேலும், கந்தர்வக்கோட்டை அருகே அரியாணிப்பட்டியில் அனுமதியின்றி செயல்பட்ட மனநல காப்பகத்தில் தங்கி இருந்த 78 ஆண்கள் உட்பட 105 மனநலம் பாதிக்கப்பட்டோர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் புதுக்கோட்டை முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் மனநல சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, 2 முதி யோர் இல்லங்கள் மற்றும் ஒரு மனநல காப்பகத்துக்கு ஆட்சியர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

ஆய்வின்போது, கோட்டாட்சி யர்கள் அறந்தாங்கி சொர்ணராஜ், புதுக்கோட்டை அபிநயா, மாவட்ட மனநல திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் குணசீலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்