தொடர் மழையால் வண்டி நத்தம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்செங்கோடு அதன் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டிநத்தம் கிராமத்தில் 69 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய ஏரி அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது. பல ஆண்டுகளுக்குப்பின்னர் ஏரி நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வண்டி நத்தம் பெரிய ஏரி முழுக்கொள்ளளவையும் எட்டினால் அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் அருகே 22 ஏக்கர் பரப்பளவில் உள்ள சின்ன ஏரிக்குச் செல்லும் வகையில் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சின்ன ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் சிறு பாலம் கட்டும் பணி முடிக்கப்படாமல் உள்ளதால், தண்ணீர் ஏரிக்கு செல்வதில் சிக்கல் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். மேலும், 60 ஆண்டுகளாக சீரமைக்கபடாமல் உள்ள ஏரிக்கரையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:
சிறு பாலம் கட்டுமானப் பணி நடைபெறுவதால் தண்ணீர் சென்றால் பாதிப்பு ஏற்படும். எனவே, குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தோம். எனினும், அதில் சிலர் மணல் மூட்டை வைத்து அடைத்துள்ளனர். அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
சில தினங்களுக்குப் பின்னர் வழக்கமான வழியிலேயே சின்ன ஏரிக்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
மழை மீண்டும் வந்தால் ஏரியில் தண்ணீர் வடிந்து செல்ல இடமில்லாமல் ஏரிக்கரை உடையும் அபாயம் இருப்பதால் உபரி நீர் வெளியேறும் வழியை உடைத்து கூடுதலாக தண்ணீர் பொன்னையாறு ஏரிக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago