நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.50 வசூல் : குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

நிலக்கோட்டை அருகே ராம ராஜபுரம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.50 வீதம் முறைகேடாக வசூலிப்பதாக விவசாயிகள் முறையிட்டனர்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வே.லதா, வேளாண் இணை இயக்குநர் பாண்டித்துரை, வேளாண் துணை இயக்குநர் சுருளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள கதிரையன்குளத்தில் இருந்து சிந்தலக்குண்டு, வேட்டுவன்குளம், செங்குளம், ஆலங்குளம், சின்னக்குளம், ஆண்டியன்குளம், பிரம்மசமுத்திரம் கண்மாய் களுக்கான நீர்வரத்து வாய்க்கால் சுருங்கிவிட்டது.

இவ்வாய்க்காலைத் தூர்வாரி குளங்களுக்கு முறையாக தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடகனாறு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் பதில் அளித்தார்.

நிலக்கோட்டை அருகே ராமராஜபுரத்தில் செயல்படும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் ஒரு நெல் மூட்டைக்கு ரூ.50 வீதம் முறைகேடாக வசூலிக்கின்றனர். இந்த முறைகேடு குறித்து ஆட்சி யர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமராஜபுரம் பகுதி நெல் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

சாணார்பட்டி பகுதியில் அதிக அளவில் மணல் திருட்டு நடக்கிறது. இதுகுறித்து கனிமவளத் துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. மணல் கடத்தலை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்