ஈரோடு மாநகராட்சி பகுதியை ஒட்டிய சோலார் பகுதியில், ஒரே தெருவில் 10 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதால், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பருவமழைக்காலம் தொடங்கியுள்ளதால் ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களைத் தடுக்க ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநகராட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று, டெங்கு தடுப்பு நடவடிக்கையாக, கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
வீடுகள் தோறும் சென்று, மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரத்தை முறையாக பராமரிக்காத வீடு, தொழிற்சாலை, கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், காய்ச்சல் உள்ளிட்ட பருவமழைக்கால நோய்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், லக்காபுரம் ஊராட்சி சோலார் செண்பகமலை நகர் பகுதியில் ஒரே தெருவைச் சேர்ந்த 10 பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் நோய் தடுப்புப் பணியில் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். மாநகராட்சியையொட்டியுள்ள பகுதியில் வைரஸ் காய்ச்சல் பரவல் உள்ளதால், அதனையொட்டியுள்ள பகுதிகளிலும், நோய் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago