திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கிராப்பட்டி, எடமலைப்பட்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் எல்இடி விளக்குடன் கூடிய மின் கம்பம் நிறுவ டெண்டர் அளிக்கப்பட்டு, ஒரு மாதத்துக்கு மேலாகியும் பணிகள் இதுவரை தொடங்கப்படாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதுடன், விபத்துகளிலும் சிக்குகின்றனர்.
திருச்சி ஜங்ஷன் அருகே புதிய மேம்பாலம் கட்டும் பணி 2016-ல் தொடங்கியபோது, இதன் ஒரு பகுதியாக பழைய மதுரை சாலையை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படையணி குடியிருப்புப் பகுதியில் இருந்து கிராப்பட்டி புதிய மேம்பாலம் வரை 730 மீட்டர் தொலைவுக்கு விரிவாக்கம் செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, விரிவுபடுத்தப்பட்ட சாலையின் நடுவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, இருவழிச் சாலையாக பிரிக்கப்பட்டது. இந்தத் தடுப்புகளை உடைத்து, 32 இடங்களில் புதிய மின் கம்பங்கள் நிறுவுவதற்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு டெண்டர் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்தப் பணிகள் தொடங்கப்படாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுதொடர்பாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியது: இந்தச் சாலையில் பல மாதங்களாகவே மின் விளக்குகள் இல்லை. ஏற்கெனவே இருந்த ஓரிரு மின் விளக்குகளும் புதிய மின் கம்பங்கள் அமைப்பதற்காக பல மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. அதன்பிறகு புதிய மின் கம்பமும் அமைக்கப்படாததால், அந்தச் சாலை இருட்டாகவே இருந்து வருகிறது. அதிலும், தற்போது மழைக் காலம் என்பதால் மாலை நேரத்திலேயே இருண்டு விடுகிறது. இரவு 8 மணிக்கெல்லாம் கும்மிருட்டாக மாறிவிடுவதால், வாகன விளக்கு வெளிச்சத்தை மட்டுமே நம்பி வாகனத்தை இயக்க முடியவில்லை. சாலையில் படுத்துக் கிடக்கும் மற்றும் திடீரென சாலையைக் கடக்கும் கால்நடைகளை வாகன ஓட்டிகளால் பார்க்க முடியாததால், அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. இதேபோல, பாதசாரிகளுக்கும் பெரிய விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் முறையிட்டபோது, எல்இடி விளக்குடன் மின்கம்பம் நிறுவுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என தெரிவித்தனர். ஆனால், டெண்டர் அளிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை என்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது: அந்தச் சாலையில் கிராப்பட்டி பகுதியில் 27 மின் கம்பங்கள், எடமலைப்பட்டிப்புதூர் பகுதியில் 5 மின் கம்பங்கள் என 32 மின் கம்பங்கள் ரூ.28 லட்சத்தில் நிறுவப்பட உள்ளன. தலா 8 மீட்டர் உயரத்திலான ஒவ்வொரு மின் கம்பத்திலும் 120 வாட் திறன் கொண்ட தலா 2 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த மின் கம்பங்களுக்கு பெற்ற மின் இணைப்பு உள்ளதால், மின் கம்பங்கள் நிறுவியவுடனேயே மின் இணைப்பும் உடனடியாக கொடுக்கப்பட்டுவிடும். மின் கம்பங்கள் நிறுவும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கப்படும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago