``டிஏபி உரத்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது” என தூத்துக்குடியில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடைசியாககடந்த பிப்ரவரி 25-ம் தேதி விவசாயிகள்குறைதீர் நாள் கூட்டம் நேரடியாக நடைபெற்றது. அதன்பிறகு, சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கரோனா ஊரடங்கு காரணமாக நடைபெறவில்லை. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது.
அரசு அனுமதியின்பேரில், 8 மாதங்களுக்கு பிறகு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்து பேசியதாவது:
மாவட்டத்தில் இதுவரை 65 சதவீதம் பேர்தடுப்பூசி போட்டுள்ளனர். மாநில அளவில் தடுப்பூசி போடுவதில் தூத்துக்குடி மாவட்டம் பின்தங்கியே இருக்கிறது. விவசாயிகள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
மழைநீரை சேமிக்கும் வகையில் அதிகளவில் பண்ணைக் குட்டைகளை அமைக்கதிட்டமிட்டுள்ளோம். இதற்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும். மாவட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுமுன்கார் சாகுபடிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்பகுதிகளில் அறுவடை தொடங்கியுள்ளது. இதற்காக 8 இடங்களில் நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
டிஏபி உரம் தட்டுப்பாடு
``மாவட்டத்தில் எந்த கடையிலும் டிஏபி உரம் கிடைக்கவில்லை. ஒரு சிலதனியார் கடைகளில் ஒரு மூட்டை டிஏபிவாங்க வேண்டுமானால், ஒரு மூட்டை கலப்புஉரம் அல்லது வேப்பம் புண்ணாக்கு வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். மேலும், அதிக விலைக்கு விற்கின்றனர்” என, விவசாயிகள் பலர் புகார் தெரிவித்தனர்.
வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், ``டிஏபி உரம் தட்டுப்பாடு தமிழகம்முழுவதும் இருக்கிறது. மூலப்பொருட்கள் விலையேற்றம் காரணமாக சில நிறுவனங்கள் டிஏபி உரம் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. டிஏபி உரத்துக்கு மாற்றாக, 20:20 காம்ப்ளக்ஸ் உரத்தை விவசாயிகள் பயன்படுத்தலாம்” என்றார்.
ஆட்சியர் பேசும்போது, ``உரம் விலைதொடர்பாக வேளாண்மை துறை சார்பில்அரசு நிர்ணயித்த விலையை குறிப்பிட்டு ஸ்டிக்கர் அச்சிட்டு அனைத்து உரக்கடைகளிலும் ஒட்ட வேண்டும். மேலும், விவசாயிகள் தொடர்பு கொள்வதற்கான அதிகாரிகளின் செல்போன் எண், உரம் கையிருப்பு விவரம் போன்றவற்றையும் அதில் குறிப்பிட வேண்டும்” என அறிவுறுத்தினார்.
வெங்காயம் காப்பீடு
தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி பேசும்போது, ``விளாத்திகுளம், வேம்பார் பிர்கா பகுதிகளில் கடந்த ஆண்டு மழையில் வெங்காயப் பயிர்கள் அழுகி சேதமடைந்தன. ஆனால், பயிர் காப்பீட்டு திட்டத்தில் இந்த இரு பிர்காக்களிலும் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டதால், விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை” என்றார். ``இது தொடர்பாக விசாரித்து, விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என, ஆட்சியர் உறுதியளித்தார்.
கால்வாகள் விரிவாக்கம்
வல்லநாடு விவசாயி நங்கமுத்து பேசும்போது, ``மருதூர் கீழக்காலில் 9-வது மடை கடந்த 60 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மடையை திறக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
அத்திமரப்பட்டியைச் சேர்ந்த ஜோதிமணி, ``உப்பாற்று ஓடையை தூர்வாரி கரையை பலப்படுத்திய ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கிறோம். உப்பாற்று ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்” என்றார்.
கால்வாய்கள் விரிவாக்கம்
உடன்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன் பேசும்போது, ``மருதூர் மேலக்கால்வாயை விரிவாக்கம் செய்ய வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்த ஆட்சியர், ``மழைக்காலங்களில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை பயன்படுத்தும் வகையில், மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் ஆகிய கால்வாய்களை விரிவாக்கம் செய்ய, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பழனிவேலாயுதம், கூட்டுறவு துறை இணைப் பதிவாளர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago